முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஈழத்தமிழரின் பண்பாட்டு பண்டிகையான ஆடிப்பிறப்பு

2318

ஈழத்தமிழரின் பண்பாட்டு பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று.
“தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்”
ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்து மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். தனித்துவமான கலாசாரங்கள் பல கொண்ட யாழ்ப்பாண இந்து மக்களினால் இத் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. ஆடிப் பிறப்பு திருநாள் இவ் வருடம் 17.07.2017 ம் திகதி அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.
ஆடி மாதம்.தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்பெறுகின்றது. அத்துடன் ஆடி மாதத்தில் பூதேவி பூமியில் அம்மனாக அவதரிதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. அத்துடன்; ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.
ஆடி மாதத்தில் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன ஆடிப் பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும், எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
இந்து மக்கள் ஒரு வருடத்தை இரு அயனங்களாக வகுத்து கணக்கிடுகின்றனர். ஒருமுறை சூரியன் வடதிசை நோக்கிச் நகர ஆரம்பிக்கும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலம் ”உத்தராயணம்” என்றும்; சூரியன் தென் திசை நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிக்கும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம்”தட்சணாயணம்” என்றும் அழைக்கின்றார்கள்.
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது பூமியில் வாழும் எமக்கு ஒரு வருடமாகும். விளக்கமாக கூறுவதாயின் எமது ஒருமாத காலம் தேவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்களாகும். (தேவர்களுக்கு 24 மணித்தியாலயங்கள் மானிடர்க்கு ஒரு வருடமாகும். என்பதனால்)
உத்தராயண காலம் தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகவும்; தட்சணாயண காலம் இராப்பொழுதாகவும் கணிக்கப் பெறுகின்றது. உத்தராயண காலம் சூடான காலமாகவும் தட்சணாயண காலம் குளிரான காலமாகவும் இருப்பதனால் உத்தராயண கால ஆரம்ப தினமான தை முதலாம் நாள் தைப்பொங்கல் பொங்கி சூரியனுக்கு விருந்து படைக்கின்றோம்.
அடுத்து வரும் தட்சணாயண காலம் தேவர்களுக்கு இராப்பொழுது ஆரம்பமாகின்றது. அது ஆடி முதலாம் நாள் அவர்களுக்கு மாலைநேரமாக அமைவதால் அவர்களுடன் நாமும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம். அத்துடன் விசேட வழிபாடு செய்தலும், உற்றார், உறவினர்களுக்கும், மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்க்கும் இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் இப் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும்.
இது இவ்வாறிருக்க முதல் பாதி ஆண்டு தேவர்களுக்குரியதென்றும் அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தால் இனிப்பான கூழும் கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.
ஆடிமாதத்தின் சிறப்பை அறிந்த பண்டைய தமிழ் இந்து மூத்த குடியினர் கொண்டாடியதாக வரலாறுகள் கூறுகின்றன.ஆடிப்பிறப்பினை ஒர் விஷேட தினமாக கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் தற்பொழுதும் உள்ளனர். பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டு வருவது அவர்களின் தமிழ் இந்து கலாச்சார பண்பாட்டை எடுதியம்புவனவாக அமைகின்றது.
இந்திய தமிழ் இந்துக்கள்; ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ”ஆடிச் சீர்” செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ”ஆடிப் பால்” என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதானாலும், சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் (சித்திரையில் புத்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் குடும்பம் நாசம் என) ஒரு ஐதீகம் இருப்பதால் அவ்வாறான வழக்கத்தை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.
ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இந்த கட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் “ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி” என்பார்கள்.
திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்” என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.
திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
ஆடி மாதப் பழமொழிகள் பல. “ஆடிப் பட்டம் தேடி விதை’, “ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்’, “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி’, “ஆடிக் கூழ் அமிர்தமாகும்.’
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.
சேலம் ஏழு பேட்டை களில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ் வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவா கும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத வித மாக செருப்படித் திரு விழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.
திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார் கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள் ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறி களால் அலங்காரம் செய்வர். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார் கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.
செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள். அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தரு ளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள். ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத் திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும் பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.
ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் “ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்ற பாடலும் தான்.
ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் முற்காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப் பெற்றது என்பதனையும், ஆடிப்பிறப்பிற்கு முதல் நாள் சிறுவர்கள் கொள்ளும் உற்சாகத்தினையும், சந்தோசத்தையும் தம்மையும் ஒரு சிறுவனாக பாவனை செய்து பாடிய பாடல் பிரபல்யமானது.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே அமைகின்றது. யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லூர் கந்தசுவாமி கோவில் பேருட்சவமும், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய மஹோற்சவமும் ஆடி மாதத்தினை கருவாக வைத்து இடம்பெறுவதால்; யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய மக்களில் அனேகமானோர் ஒன்று கூடும் மாதமாகவும் அமைந்து விடுகின்றது. அதனால் நவீன காலத்திலும்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான ஒர் மாதமாக அமைகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *