BREAKING NEWS
b2de5e59fc9b49d9ec4b05f9a080684b-0-660x330

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் காவற்துறையினருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதனை காவல்துறை மா அதிபர் முன்பாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

126

யாழ்.மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் குற்றங்களை குறைக்க இயலாது என்றும் காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு எடுத்துக்கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கையின் சட்ட ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர், காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர், இன்று பிற்பகல் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர், வடமாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும், அதேபோல் குற்ற செயல்களும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன என்றும், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இவை அதிகளவில் இடம்பெறுகின்றன என்பதை விளக்கியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றவாளிகளுடன் காவற்துறையினர் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு சுட்டிக்காட்டியதாகவும், அதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் குற்றவாளிகளுடன் அல்லது குற்றம் செய்பவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கும் சில காவற்துறையினருடைய பெயர் விபரங்களை அவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மா அதிபர் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுடன் காவற்துறையினர் இவ்வாறு மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் நிலையில், வடக்கில் குற்றங்களை அல்லது போதைப் பொருள் கடத்தல்களை தடுத்து நிறுத்துவது கடினமான விடயம் என்பதையும் தான் சுட்டிக் காட்டியுள்ளதாகவும், அதனையும் காவல்துறை மா அதிபர் ஏற்றுக் கொண்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தெற்கில் குற்றங்களை புரிந்தவர்களையா வடமாகாணத்திற்கு அனுப்புகிறீர்கள் என்று காவல்துறை மா அதிபரிடம் வினவியதாகவும், அதற்கு அவ்வாறில்லை என்று கூறிய காவற்துறை மா அதிபர், காவற்துறையினர் வடக்கில் 2 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயம் என்று கூறியதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

குற்றவாளிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ள காவற்துறையினர் மற்றும் குற்றவாளிகளுடன் நெருக்கமாக உள்ள காவற்துறையினர் தொடர்பாக தகவல்கள் இருப்பின், அவை தொடர்பில் தனக்கு இரகசியமாக கடிதம் ஒன்றை அனுப்பிவைக்குமாறும், அதற்கமைய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை மா அதிபர் கூறியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *