BREAKING NEWS
ml

கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார்

487

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என்று, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் இன்று அனுமதியளித்துள்ளார்.

கேப்பாபுலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள் முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியிலிருந்து பகுதியளவிலான காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த அந்த மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தை துக்கதினமாக கடைப்பிடித்த மக்கள், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குச் செல்ல முற்பட்டவேளை, அவர்களைக் காவல்துறையினர் தடுத்தமையால் குழப்ப நிலை தோன்றியிருந்தது.

இதனையடுத்து குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு மீதான விசாரணைகளையடுத்து, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில், கேப்பாபுலவு மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என்று தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *