முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தேர்தலில் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது – சுமந்திரன்

1222

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துளள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 56 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டது எனவும், 40 உள்ளூராட்சி சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில், முன்னரை விட சற்று கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடும் போது, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது எனவும், இது ஒரு பின்னடைவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளில், 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும் எனவும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவித்துள்ளார்.

தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பதானது, வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவே எனவும் அவர் விபரித்துள்ளார்.

சமாந்தரமான இரு வழி பாதையாக தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தனது கருத்தாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும், ஆனால் மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாக இருக்கும் என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *