முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

லிபியாவில் 300 குடியேறிகளுடன் சென்ற பாரவூர்தி கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி!

1358

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.

மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

இதனால், மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 21-ம் தேதிவரை சுமார் 72 ஆயிரம் அகதிகள் இத்தாலிக்கு கள்ளத்தனமாக வந்து சேர்ந்துள்ளனர். இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி சுமார் 2 ஆயிரம் இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது.

இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.

அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.

இதுதவிர, சாலை வழியாகவும் லாரிகள் மற்றும் கன்டெய்னர்களில் குடியேறிகளை கள்ளத்தனமாக மறைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்லும் இடைத்தரகர்கள் கூட்டம் பெருகி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சுமார் 300 குடியேறிகள் சென்ற லாரி லிபியாவின் பனி வாலித் நகரின் அருகே இன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் சோமாலியாவில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *