முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது

708

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி இந்த சூறாவளி இப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபுளோரன்ஸ் சூறாவளி அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லலாம் என்று அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வியாழன் இரவு முதல், வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு சேதமடைந்து, துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ள நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளதுடன், கடலோரம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.

மணிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த இந்த சூறாவளி, உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் வேகம் மணிக்கு 165 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளதால், இது இரண்டாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால், இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.

கரோலினாவின் சில பகுதிகளில் 20 – 30 அங்குலம் அளவுக்கு மழை பொழியும் என்றும், தனித்து உள்ள பகுதிகளில் அது 40 அங்குலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளதுடன், ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் பலரும் வந்து சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *