முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் – எதிர்க்கட்சித் தலைவர்

1472

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்துலக அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்றும், நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை என்றும் கூறியுள்ளார்.

அம்பாறை சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளது என்றும், காவல் நிலையம் அருகில் இருந்த போதும், தாக்க வந்தவர்கள் தப்பியுள்ளனர் எனவும், இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர் ஒருவர் மீதான தாக்குதலை அடிப்படையாக வைத்து கண்டியில் வன்முறை இடம்பெற்றுள்ளது என்றும், பள்ளிவாசல்கள், வீடுகள் தாக்கப்பட்டதுடன், உடைமைகள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் இருந்து தப்புவதற்காக வீடுகளை தீ வைத்து சேதம் விளைவிப்பது மோசமான நிலைமையை ஏற்படுத்தும் என்றும், சம்பவம் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், சட்டத்தை கையிலெடுத்து செயற்பட முடியும் என்று மக்கள் கருதுகின்றனரா என்றும் கேள்வி எழு்பபியுள்ளார்.

தாம் பெரும்பான்மை இனம் என யாராவது கருதி செயற்படுவார்களானால் அதற்கு இடமளிக்க முடியாது என்றும், கண்டியில் மூன்று, நான்கு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஏன் அவர்களால் செயற்பட முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில் இவ்வாறான இன ரீதியான அடக்குமுறைகள் இடம்பெற்றன என்றும், அத்தகைய நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்போது இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், சட்டம், நீதி எம்மை எதுவும் செய்யாது என்ற நிலைப்பாட்டில் இனவாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு முழுமையான பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கை கையாள்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *