முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தினை விடவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.

1371

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கொண்டுவரப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில்,  முன்னரை விடக் கடுமையான உள்ளடக்கங்கள் காணப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டத்தின் கொள்கை மற்றும் சட்டவரைவு தற்போது வெளியாகியுள்ள நிலையிலேயே, அதில் உள்ளடங்கியுள்ள விவரங்கள் குறித்து அச்சம் வெளியிடப்படுகிறது.

குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், பயங்கரவாதம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களிலிருந்து, இலங்கையின் ஒற்றுமையையும் ஆட்சிப்பரப்பின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காப்பதும் பாதுகாப்பதும் அதன் நோக்கமாக அமையும் என்று குறிப்பிடப்படுகிறது.

58 பக்கங்களைக் கொண்ட குறித்த சட்டவரைவின்படி, இலங்கை சம்பந்தமான அல்லது இறையாண்மை மிக்க ஏதாவது நாடு தொடர்பிலான பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, ஆட்சிப்பரப்பு ஒருமைப்பாடு, இறையாண்மை குறித்த கொள்கை முடிவொன்றை முழுமையாக மாற்ற, வேறுபடுத்த அல்லது மாற்றுவதற்கோ முயற்சித்தல் பயங்கரவாதக் குற்றச் செயல் என கூறப்படுகிறது.

அதேபோன்று இலங்கை அரசாங்கத்தையோ அல்லது இறையாண்மை மிக்க ஏதாவது தேசத்தினது அரசாங்கத்தையோ, சட்டத்துக்கு முரணான ரீதியில் மாற்றுதல் அல்லது கொள்கைசார் ஆதிக்கத்தை அடையும் நோக்கில், வன்முறையான அடிப்படைவாதத்தைப் பின்பற்றும் எந்த நடவடிக்கையும், பயங்கரவாதம் எனக் குறிப்பிடப்படுகிறது.

வேவு பார்த்தலும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதம், பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட குற்றம் அல்லது இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது குற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள சூழ்ச்சி செய்யும,  உடந்தையாக விரும்பும், அல்லது தயாராகும் எந்தவொரு நபருக்கும் வழங்கும் நோக்கில், இரகசியமான எந்தவொரு தகவலையும் பெறும் நோக்கில், சட்டரீதியற்ற, சட்டவிரோதமாக அல்லது அதிகாரமளிக்கப்படாத நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நபர் மீதும் இந்தச்சட்டம் பொருந்துவதாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோன்று இவ்வாறான குற்றங்களை மேற்கொள்வதற்கு முயலும் நபரொருவர், குறித்த விடயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்பதைப் பற்றி அறிந்த நிலையில், அல்லது அவ்வாறு நம்புவதற்கான போதிய காரணங்கள் உள்ள நிலையில், இரகசியத் தகவல்களைப் பகிருதலும் குற்றமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சந்தேகநபரொருவரிடம் முதலாவது காவல்த்துறை அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும் வரை, அல்லது 48 மணிநேரங்கள் செல்லும் வரை  சட்டத்தரணியொருவரைப் பெறும் வாய்ப்பு, அவருக்கு ஏற்படாது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே இந்தச் சட்டமூலம் சட்டமாக மாறுமாயின், தற்போது உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சடத்தினை விடவும் அது பாதகமான விளைவுகளைக் கொண்டதாக அமையும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *