முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

குரங்கணி தீ விபத்தின் போது பெண்களின் மானம் காத்த மலைவாழ் மக்கள்

1877

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தீயில் எரிந்து உடைகள் இல்லாமல் கிடந்தபோதும், பிணத்தை தூக்கிவரவும் தங்கள் உடமைகள், பெட்ஷீட்டுகளை அளித்து இக்கட்டான நேரத்தில் அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் அங்குள்ள மலைவாழ் மக்கள் என பாதிக்கப்பட்டவர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மனம் உருகி கூறுகின்றனர்.

குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்களில் அதிகமானோர் பெண்களே. காட்டுத் தீ திடீரென பற்ற தப்பிக்க வழியில்லாமல் தீயில் சிக்கி கருகினர். இதில் பெண்களே அதிகம் தீயில் சிக்கினர். அவர்களைப் பற்றிய தகவல்கள் வாட்ஸ் அப்பில் செய்தியாக வந்தபோது உடைகள் எரிந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீது போர்வையை போர்த்தியபடி கிடந்தனர்.

அனைத்து துணிகளும் எரிந்தபோது இவர்களுக்கு பெட்ஷீட் மட்டும் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. ஆனால் அதற்கான விடை மலைவாழ் மக்களின் அர்ப்பணிப்புமிக்க உதவியால் என்பது தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த மலைவாழ் மக்களின் உதவி குறித்து வலைதளங்களில் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர் நெகிழ்ச்சியுடன் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அந்தப்பதிவு வருமாறு:

குரங்கணி தீ விபத்தில் மாண்டோர் மாண்டுவிட்டனர், மீண்டோர் மீண்டுவிட்டனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்களின் உடைகளையும், உணவுப் பொருட்களையும் மீட்புக் குழுவினருக்கும் அங்கு தீயில் சிக்கியவர்களுக்கும் செலவிட்ட அப்பாவி மலைவாழ் மக்களைப்பற்றி எந்த டிவி சேனலும் ஒரு வார்த்தை கூட பேசவோ, அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்கவோ மனமற்றுப் போனது.

எங்கள் குடும்பம் சார்பாக சாஸ்டாங்க நமஸ்காரங்களையும், அந்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் இங்கு பதிகிறேன்.

நிச்சயம் அப்பகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இன்னும் சில நாட்களில் செய்ய ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறேன்.

நம் பிள்ளைகள் மீது போர்த்தி கூட்டி வந்த அத்தனை துணிகளும், தூளி கட்டி தூக்கி வந்த பெட்ஷீட்டுகளும்.. காட்டிலும் மேட்டிலும் கடுமையான பணியிலும் கஷ்டப்பட்டு அவர்கள் வாங்கி வைத்தவைதானே.

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இவர்கள் உள்ளே சென்று மீட்புப் பணியை முடுக்கிய பின்னர்தான் செய்தி சேனல்கள் குரங்கணி பக்கம் திரும்பியது?

அம்மக்களின் நல்லெண்ணத்திற்கும், அன்பிற்கும் ஈடாக நம்மால் ஆனதை இணைந்து செய்வோம். அவர்களுக்கான அடிப்படை தேவைகள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து சில இளைஞர்களை மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளும் நலமுடன் திரும்ப உதவிய உள்ளங்களுக்கு நம்மால் ஆன சிறு உதவியேனும் செய்ய வேண்டும்.

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பெரிதும் உதவிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுகள். தேனி பெரியகுளம் பகுதியிலிருந்து யாரேனும் உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தால் அவர் மூலமாக அனைவரும் சேர்ந்து இந்த நல்ல காரியத்தை செய்யலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மலைவாழ் மக்களும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் செய்த உதவி மகத்தானது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *