முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் காலமானார்.

1356

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார்.

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, கவிஞர் இன்குலாப் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலி!
ஈழத்தமிழர்களைத் தமிழக அரசு
காக்கத் தவறிவிட்டது என்று கூறி
2006 இல் தனக்கு அறிவிக்கப்பட்ட
கலைமாமணி விருதை ஏற்க மறுத்தவர் கவிஞர்.
அவர் எழுதிய கவிதை ஒன்று.
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி
நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை
வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்
கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்
பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்
வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.
கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?
ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?
எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?
கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!
உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்
மௌன மொழிகளில்!;
– – – – –
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?
இவை
விடை வேண்டும் கேள்விகள்
தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்
விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்
அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்
விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….
– கவிஞர் இன்குலாப்
பேராசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட கவிஞர் இன்குலாப், தீவிர தமிழ்ப் பற்றுக் கொண்டவர் என்பதுடன், 1965 இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டதனால், தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது என்ற இயற்பெயர் கொண்ட இன்குலாப் தமிழ்நாட்டின் கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப், ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து எழுதிய கவிதைகள், 1990களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு தொகுப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவத்தினர் ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த, “ஒப்புக்குப் போர்த்த அமைதித் திரையில் ஓரங்கள் பற்றி எரிகின்றன” என்ற பிரபலமான பாடலை கவிஞர் இன்குலாப் எழுதியிருந்தார்.

கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக்கால கவிதைகள் கார்க்கி இதழில் வெளிவந்ததன் பின்னர், தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார்.

சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில், 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் “ஒவ்வொரு புல்லையும்” என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *