முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போதைப் பொருள் வியாபாரிகள் தந்திரமாக தப்பித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

529

போதைப் பொருள் வியாபாரிகளை தாம் கைது செய்ய முற்படும்போது அவர்கள் தந்திரமாகத் தப்பித்துவிடுகிறார்கள் எனவும், அவர்கள் தங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை அத்தியட்சகரின் பிரதிநிதியான காவல்துறை பரிசோதகர் கமஹே தெரிவித்துள்ளார்.

வடக்கு -கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ‘போதை ஒழிப்போம் வன்முறை தவிர்ப்போம்’ எனும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றதுடன், இதன்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட ரீதியில் செயற்படும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

பிரதேச மட்டங்களில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு செயலணி அமைத்து, பிரதேச ரீதியாக விழிப்புக் குழுக்களை நிறுவுவதற்கு இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்பேர்து கருத்து வெளியிட்ட வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின், தோல்வி அடைந்த அரச தலைவர்களின் வரிசையில் மைத்திரிபால வந்துவிட்டார் எனவும், போதையற்ற நாட்டை உருவாக்குவேன் என்று தெரிவித்தவர், யாழ்ப்பாணத்தில் இன்று தொடர்கின்ற போதைப் பொருள்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாண நகரத்தில் நடைபாதையில் போதைப் பாக்கு விற்பனை செய்தமைக்காக கைது செய்யப்பட்ட விற்பனை முகவர், தற்சமயம் நடமாடும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனவும், முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளில் தமது வியாபாரங்களை ஆரம்பித்துள்ளார் எனவும், போதைப் பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறே கூட்டத்தில் கலந்துகொண்டோர் பலரும், யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடில்லாது தொடரும் வன்முறைகள் தொடர்பில் பல கேள்விகளை காவல்துறையினரிடம் எழுப்பிய போதிலும், காவல்துறையினர் அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை.

சட்டத்தில் பலவீனம், காவல்துறையினருக்கு ஆளணிபோதாது, வாகன வசதிகள் இல்லை என்று மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை அத்தியட்சகரின் பிரதிநிதியான காவல்துறை பரிசோதகர் கமஹே, மாவா பாக்கில் போதைத் தன்மை குறைவு என்று இரசாயன அறிக்கைகள் தெரிவிப்பதாகவும், இதனால் மாவாப் பாக்கு வியாபாரிகள் கைதாவதிலிருந்து தப்பித்து விடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *