முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

புதிய அரசியல் சாசனம் இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தல் வேண்டும் – சுரேஷ்

1282

புதிய அரசியல் சாசனமானது இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் எனவும், மாறாக இலங்கையை மத சார்புடைய நாடாக மாற்றி தமிழ் மக்கள் தலைகளில் பௌத்தத்தை திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதமர் உள்ளிட்டோர் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு பன்மைத்துவ சமூகம் என்பது மட்டுமன்றி, ஏறத்தாழ 70 சதவீதமானோர் பௌத்தர்களாகவும், ஏனையோர் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்கின்றனர் எனவும் அவர் விபரித்துள்ளார்.

அதேவேளை வடக்கு-கிழக்கில் வாழும் மிகப் பெரும்பான்மையோர் தமிழ் பேசுபவர்களாகவும் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனா என்பதையும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அரசியல் சாசன ரீதியாக வடக்கு-கிழக்கு உட்பட முழு இலங்கையிலும் பௌத்தம் முதலாவது மதமாக இருக்க வேண்டும் என்பதும், ஆட்சியாளர்களினால் அது பேணி வளர்க்கப்படவேண்டும் என்பதும் எவ்வளவு தூரம் சரியான கருத்தாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தமானது வடக்கு-கிழக்கு என்பதை தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடமாகக் குறிப்பிடுகின்றது என்றும், இந்த விடயத்தை அப்போதிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் இந்தியாவின் ராஜீவ்காந்தி அரசும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இப்பொழுது, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் இராணுவம் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,  இதனை சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கமாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர் என்றும் விபரித்துள்ளார்.

இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது என்றும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் வடக்கு-கிழக்காவது மதச்சார்பற்ற பிரதேசமாக இருக்க வேண்டுமென்பது தமிழ் மக்களின் விருப்பமாக இருந்துவருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கௌதம புத்தரையும், அவரது நற்சிந்தனைகளையும் நேசிக்கின்றார்கள் என்ற போதிலும், பௌத்தம் அவர்களது தலைகளின் மீது திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் சாசனமானது இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லுறவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள சுரேஸ் பிரேமசந்திரன், அவ்வாறிருக்க வேண்டுமாயின், பலமொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு மொழிக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ முன்னுரிமை அளிப்பதென்பது  பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதாகவே அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்து்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *