இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 40 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

673

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு இறுதிப் பட்டியல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலுக்காக 3.29 கோடி மக்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்த நிலையில், பட்டியலில் 2.89 கோடி பேரின் பெயர்களே இடம் பெற்றுள்ளமையால், எஞ்சிய 40 இலச்சம் பேரின் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட வழியேற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று இதனை எதிர்த்து கேள்வி எழுப்பியதனால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்க நேர்ந்தது.

1971ம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் நாளுக்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுக்கும் வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அசாம் மாநிலத்தில் வசிக்கும் அனைவருமே தங்கள் குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்களோடு இந்தப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டது.

இதனிடையே மாநிலத்தில் வசிக்கும் பெங்காலி முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், அவர்களை முடியுமானால் நாடு கடத்தவும் இந்தப் பட்டியலை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாது என்று தெரிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும், உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏதும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *