முக்கிய செய்திகள்

அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் எழுக தமிழர் பேரணி வெற்றி பெற்றுள்ளது

1155

சிறிலங்கா படையினரின் அச்சுறுத்தல், இடையூறுகள் மற்றும் விசமிகளின் குழப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், தமிழ் ம்ககள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுக தமிழர் பேரணி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலிலும், யாழ் பல்கலைக்கழக முன்றலிலும் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்கள், பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியாக சென்று யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள், குறிப்பாக யாழ்ப்பாணம் நகர் பகுதியிலுள்ள வர்த்க நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் தனியார் கல்வி நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என்பனவும் இன்று மூடப்பட்டதுடன், தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறவில்லை என்பதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் மாத்திரமே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமது பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு அலையாக ஒன்று திரண்ட மக்கள், “தேச துரோகியே வெளியேறு”, ”“சிங்கள இராணுவமே வெளியேறு”, போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணி யாழ்.முற்றவெளியை சென்றடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதுடன் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு எழுக தமிழ் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது.

யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்திய போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி கரகோஷித்து தங்களது பலத்த ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும், அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் உரையாற்றியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *