பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேடோ அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் (Helsinki) இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், சிரியாவின் போர் குறித்தும் உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
அதிபர் புட்டின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஆகியோருக்கு இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமெரிக்கா, ரஷ்யா இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை மூன்றாவது நாட்டில் நடத்துவத்றகு இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரஷ்ய அதிபர் புட்டினின் உதவியாளர் யூரி உஷாக்காவ் இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மேலதிக விபரங்களை அமெரிக்க அதிபர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே அது தொடர்பான விபரங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பப் இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் வியட்நாமில் நடைபெற்ற ஆசிய பசிபிக் சம்மேளனத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.