முக்கிய செய்திகள்

அதிபர் தேர்தலில் டிரம்ப் – ரஷ்யா கூட்டுச்சதி இல்லை

304

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லை என்று ராபர்ட் முல்லரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அறிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆனால் அதிபர் டிரம்பை வெற்றி பெற செய்வதற்காக ரஷ்யா தன் ஹேக்கர்கள் மூலம் வாக்குப்பதிவில் முறைகேடு செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்பும் ரஷ்யாவும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த புகாரை அதிபர் டிரம்பும் ரஷ்யா அரசும் மறுத்தனர். இருப்பினும் சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு கடந்த வாரம் தன் விசாரணை அறிக்கையை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரிடம் ஒப்படைத்தது.

அந்த விசாரணை அறிக்கையை முழுமையாக படித்த அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அதன் சுருக்கத்தை அமெரிக்க எம்.பிக்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பித்தார். அதனுடன் தன் 4 பக்க கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் ரஷ்யாவுடன் இணைந்து சதி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை அதிபர் டிரம்பை குற்றவாளி என்றும் அறிவிக்கவில்லை நிரபராதி என்றும் அறிவிக்கவில்லை என்று வில்லியம் பார் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் அரசியல் வெற்றி 

ராபர்ட் முல்லரின் விசாரணை அறிக்கை முடிவுகள் அதிபர் டிரம்புக்கு கிடைத்த அரசியல் வெற்றியாக கருதப்படுகிறது.

தன் மீதான விசாரணையை கடுமையாக சாடி வந்த அதிபர் டிரம்ப், விசாரணை அறிக்கையின் முடிவு தன்னை குற்றமற்றவன் என நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரான நான் இத்தகைய அபவாதங்களையும் அது குறித்த விசாரணையும் எதிர்கொண்டது நம் நாட்டிற்கு கிடைத்த அவமானமாகும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *