முக்கிய செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ

364

மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கூறினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.

இந்த பயத்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். 1 நாடாளுமன்ற தொகுதிக்கு இவர்கள் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம் வகுத்துள்ளார்கள்.

இதற்காக போலீஸ் வாகனங்கள் மூலமும், ஆம்புலன்ஸ் மூலமும் பணத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினரும், வியாபாரிகளும் ரூ.50,000 கொண்டு சென்றால் கூட அதை பார்த்துக்கொள்வார்கள்.

பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியினர் நினைக்கிறார்கள். ஆனால் பணபலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி தருவார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க. தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.

காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியை மீத்தேன் எடுக்கும் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது.

கஜா புயலின் போது பலியானவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இழப்பீடு வழங்க மிக மிக குறைவாக பணம் ஒதுக்கி உள்ளது.

இன்னும் ஏராளமான வஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4½ கோடி வாக்காளர்களும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி.

தி.மு.க. கூட்டணி வெல்வது உறுதி.

தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போது தான் தொடங்கி உள்ளது.

இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம்  கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *