முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம்

1091

கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தலைவி நாகேந்திரன் ஆஷா இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார்..

காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே ஆஷா இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமது உறவுகளை கடத்திய படை அதிகாரிகளை ஆதாரத்துடன் அடையாளப் படுத்திய போதிலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்களும் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் தாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதனாலேயே ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிப்பதாகவும் நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *