முக்கிய செய்திகள்

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ் ஊடகங்களே காரணம் என்று பிரியங்க பெர்ணான்டோ

1611

புலம்பெயர் தமிழர்களை நோக்கி வழங்கிய கைசையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தி காணொளியாக வெளியிட்டமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்று பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சாடியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தமிழீழழ தேசத்தை கூறி கோஷமிட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு முன்பாக, சிறீலங்கா தேசத்தை குறிப்பிட்டுக் காண்பித்தத்தை இட்டு தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டித்து பிரித்தானிய தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த வேளையில், சிறீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் இராணுவ சீருடையில் நின்றிருந்த தூதரக பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தனது வலது கையின் விரல்களை கழுத்திற்கு குறுக்கே அசைத்து தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சமிக்ஞை காட்சி அச்சுறுத்தியிருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவின் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில், இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் அப்பதவிக்கு நியமித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரியங்க பெர்ணான்டோ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரே தமது தலைவர் எனவும், தமிழீழமே தமது தேசம் என்று கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, எல்லாமே முடிந்துவிட்டது என்பதை தெரிவிப்பதற்கே கழுத்தில் விரலை வைத்து கைசை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள் காணொளியாக தயாரித்து, கழுத்தில் விரலை வைக்கும்போது பதிவுசெய்த காணொளியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து பிரச்சினைக்குரிய விடயமாக மாற்றியமைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினருக்கு நேரடியாக தாம் விடுத்த பதிலையிட்டு சிறீலங்கா பிரஜை என்ற வகையில் பெருமிதம் கொள்வதாகவும், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *