முக்கிய செய்திகள்

அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஆரம்ப புள்ளியாக்கி அரசியல் கைதிகள் தொடர்பிலான பேச்சை ஆரம்பித்திருக்கலாம் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

440

அனைவருக்கும் பொது மன்னிப்பு என்ற கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என்று, இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய நாள் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பலர் வெளியே போராட்டம் நடத்துவது போல, தான் அரசாங்கத்தினுள் இருந்தும் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருப்பதாகவும், வெளியே நடக்கும் போராட்டம் கண்களுக்கு தெளிவாக தெரியும் போது, உள்ளே நடக்கும் போராட்டம் தெளிவாக தெரியாது இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சம்பிக்க ரணவக்க அனைவர்க்கும் பொது மன்னிப்பு எனும் வாதத்தை முன் வைத்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் ஊடக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் , இராணுவ தரப்பினரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்த நிலையில், அது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தி இருந்ததுடன், அது உடனடியாக தமிழ் தரப்பால் நிராகரிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கடத்தல்கள் கொலைகள் செய்த படைத்தரப்பையும் விடுவிக்க வேண்டுமா என்று சம்பிக்க ரணவக்கவிடம் கேட்டதாகவும், உடனே அவர் இல்லை என்று அதனை மறுத்ததாகவும், மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே யார் அரசியல் கைதிகள் யார் தனிபட்ட குற்றவாளிகள் என்பதனை அறிய வேண்டும் என்பதற்காக முதலில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் எனவும், எடுத்தவுடனே எல்லாத்தையும் நிராகரிபதனால் எதனையும் பெற முடியாது என்றும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *