அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

1108

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் கிளிநொச்கி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண அரசுக்கோ, மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாது பல பணிகளை மத்திய அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அபிவிருத்தி திட்டங்களுக்காக மாகாணத்திற்குள் உள்ள காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அவா, அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும் எனவும் விபரித்துள்ளார்.

மத்திய அரசாயங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தற்போதைய அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்கள் வேறு தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்றும், இது விரும்பத்தக்கது அல்ல எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மாங்குளத்தில் கூட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு காணியை நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே வட மாகாணசபை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கின்றது எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்றைய இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஜங்கரநேசன்,சத்தியலிங்கம், குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்னம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *