முக்கிய செய்திகள்

அமெரிக்க பாதிரியாரை விடுவிக்கும் வரையில் துருக்கிக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது

359

அமெரிக்க நாட்டு பாதிரியாரை விடுவிக்கும் வரையில் துருக்கி நாட்டிற்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்ற்சசாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரிவ் புரூன்சன் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரை விடுதலை செய்ய அமெரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கையை துருக்கி ஏற்றுக்கொள்ளாததை அடுத்து துருக்கி மீது அமெரிக்கா வரி விதிப்பை மேற்கொண்டு பொருளாதார தடைகளை பிரயோகித்துள்ளது.

ஆனால் அதற்கான பதில் நடவடிக்கையாக அமெரிக்காவின் இறக்குமதிகளுக்கான வரியை துருக்கியும் அதிகரித்துள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் முன்சின், துருக்கி அமெரிக்காவின் நல்ல நண்பன் என்று நிரூபிக்க தவறிவிட்டதாக குறை கூறியுள்ளார்.

அமெரிக்கப் பாதிரியார் புரூன்சன் விடுவிக்கப்படவில்லை என்றால், துருக்கி மீது விதிப்பதற்காக பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன என்றும், அவரை விரைவாக விடுதலை செய்யாவிட்டால் தாங்கள் திட்டமிட்டதைவிட அதிகமான பொருளாதாரத் தடைகளை துருக்கி எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *