முக்கிய செய்திகள்

அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள் தொலைபேசியில் பேச்சு

135

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக விளாடிமிர் புட்டினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களுக்கு அல்லது தங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயற்படும் என்பதை ஜனாதிபதி பைடன் இதன்போது தெளிவுபடுத்தினார் என அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணையவழி தாக்குதல் குறித்தும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிரான செயற்பாடு குறித்தும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர் என்று  மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *