அமைச்சுக்களின் செயலாளர்களுடன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்

299

இலங்கையில் தலைமை அமைச்சரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை முற்பகல் அவசரமாகச் சந்தித்துள்ளார்.

அரச தலைவர் செயலகத்தில் இந்த சந்திப்பில், நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும், சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கியதாக, அரச தலைவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே, நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறும், அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிதாக நியமிக்கப்பட்ட தலைமை அமைச்சரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 12ஆம் நாள் வரை, இடைக்காலத் தடையுத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை நேற்று வழங்கியமையினை அடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பில் மகிந்த ராஜபக்சவும், அவரின் சிறீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பின் தலைவர்களும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பொதுத் தேர்தலொன்றுக்கான தங்கள் அழைப்புத் தொடரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *