முக்கிய செய்திகள்

அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 5 நாளில்

127

இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 5 ஆவது நாளை எட்டியுள்ளது.

இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் பிரித்தானிய நேரம் மாலை மூன்று மணிக்கு நேரலை மற்றும் மெய்நிகர் செயலிகளினூடாக ஒளி/ ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களிற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் அகிம்சை வழியில் உயிர் தியாகங்களை புரிந்த தியாக தீபங்களான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அம்பிகை செல்வகுமார் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.

தாயகத்திலிருந்து அருட்தந்தை சக்திவேல் அடிகளாரதும் இஸ்லாமிய மதத்தினைச் சேர்ந்த மௌலவி ரிஸ்வி அவர்களதும் ஆசி உரைகள் இடம்பெற்றதுடன் அம்பிகை செல்வகுமார் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தங்கை அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழர்களின் விடுதலை உணர்வை உயிர்ப்பித்து எழுச்சி பெற செய்துள்ளதாகவும் இப்போராட்டத்தினை மிக விரைவில் பரப்புதல் செய்து இதனை வலுப்பெற செய்யுமாறு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பேராசிரியர் குழந்தைசாமி. மாவீரரின் தாய் சபரியம்மா மற்றும் சகோதரி சந்திரிக்கா ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தனர்.

மேலும் வசந்தகுமாரி தனது கருத்துக்களை கவி வரிகளில் வெளிப்படுத்தியிருந்தார். இன்றைய மெய்நிகர் நிகழ்வுகள் பிற்பகல் 05.15மணியளவில் நிறைவு பெற்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *