முக்கிய செய்திகள்

அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது (முழுமையான அறிக்கை உள்ளே)

43

சிறிலங்காவின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓக்லண்ட் இன்ஸ்டிடியூட் (Auckland Institute) தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வை முன்னிட்டு குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் மக்கள் தொகையை மாற்றுவதற்காக சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளாக மாற்றப்படுவது தமிழர்களின் வரலாறு மற்றும் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியென்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும், ஆறு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் வீதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து, 5 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட கட்டுமான மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த பின்னரும் யாழ்ப்பாணத்தில் 23 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்றனர்” என்றும் ஓக்லண்ட் இன்ஸ்டிடியூட் (Auckland Institute) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தமிழ் அறிக்கையை பார்வையிட

https://ctr24.com/wp-content/uploads/2021/03/endless-war-pr-tamil.pdf
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *