முக்கிய செய்திகள்

அரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

1201

அரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  பிரத்தியேக செவ்வியொன்றில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிகவும் மோசமானது  என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கும் பதிலளித்த அவர், அனைத்துலக சட்டத் திட்டங்களுக்கு அமையவே புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதனால், இதனை உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சட்டங்களை உள்ளடக்கி அனைத்துலக தரத்திலும் முன்னையதை விட மிகவும் உறுதியாகவும் கடைபிடிக்கக்கூடியதாக புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியிருந்த முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஒரு தசாப்தகால ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மனநிலை மாற்றத்தை உடனடியாக மாற்றியமைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரிகளும், அதிகார வர்க்கத்தினருமே தொடர்ந்தும் பதவிகளில் இருப்பதனால், ஆட்சி மாறினாலும் சில விடயங்களை மாற்ற முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *