முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற நேரிடும்

997

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தேசியப் பிரச்சினைக்கு வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பது என்ற மக்களின் ஆணையை கூட்டமைப்பு பெற்றுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக எப்படி ஒரு சிறந்த உடன்பாட்டுக்கு வரலாம் என்று இலங்கை அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேசி வருகின்ற போதிலும், விரிவான அதிகாரப் பகிர்வுக்கான பொறிமுறையாக 13ஆவது திருத்தச்சட்டத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் எனவும், அது தனது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய ரீதியாக வழங்கப்படுகின்ற அரசியல் தீர்வின் ஊடாக நாட்டில் வாழும் சகல மக்களதும் இறைமை மதிக்கப்பட வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டமைப்பு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பை பொறுத்தளவில் ஒற்றையாட்சி, சமஷ்டி, வடக்கு – கிழக்கு மீள் இணைப்பு என்பன குறித்து பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ள போதிலும், அரசியல் சாசன உருவாக்கத்தின்போது சர்ச்சைகளும் கேள்விகளும் எழுவது இயல்பானதே என்றும் தெரிவித்துள்ள அவர், இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *