முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த முனைகிறீர்களா என்று இலங்கை சனாதிபதியிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்

600

இராணுவத்திலுள்ள போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போது, தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவே அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றீர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது என்று, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கை சனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ள நிலையில், அந்தக் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான முன்னைய பல கடிதங்களின் தொடர்ச்சியாக இந்த அவசர கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும், வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பல தருணங்களில் அரசியல் கைதிகள் தொடர்பில் உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்திருந்தீர்கள் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குப் பதியப்படாமல் சிறையில் தொடர்ந்து விளக்கமறியலில் இருப்போர்க்கு எதிராக உடனே வழக்குகள் பதியப்படப் போவதாகவும், போதுமான சாட்சியங்கள் இல்லாதவரை உடனே விடுவிக்கப் போவதாகவும் தாங்கள் வாக்குறுதிகள் அளித்தும் அவை இற்றைவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக முன்னைய சனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், அவரின் நேரடி உள்ளீட்டை வேண்டிக் கடிதம் எழுதியிருந்ததாகவும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மற்றையோராலும் தன்னாலும் இது சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட பிரயத்தனங்கள் எவையும் பயனளிக்கவில்லை எனவும், இதன் காரணத்தால் தான் அனுராதபுர அரசியல் சிறைக் கைதிகள் சாகும்வரை உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் உண்டுபண்ண நல்லாட்சி அரசாங்கம் மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று கூறப்படும் கூற்று, இவ்வாறு அரசியல் சிறைக்கைதிகள் சம்பந்தமாக தாங்கள் காட்டும் தாமதத்தின் நிமித்தம் வெறும் கண்துடைப்போ என்று எண்ணவேண்டியுள்ளது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போது, குறித்த இந்தத் தமிழ்ச் சிறைக் கைதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தவே அவர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்காது தாமதிக்கின்றீர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

என்றாலும் தங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை எனவும், மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் சம்பந்தப்பட்ட பல தரப்பாரின் கருத்துக்களை அறிந்து, உடனேயே தமிழ் அரசியல்க் கைதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனவும் வடமாகாண முதலமைச்சர் இலங்கை சனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *