அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது

69

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் இந்த முடிவு, தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள சதித்திட்டம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்ய சிறிலங்கா அரசு தயங்குவது ஏன் என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாசாக்களை வைத்து இனமுறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களுக்கு மதிப்பளித்து அவற்றை அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும். முஸ்லிம் சகோதரர்களின் விருப்பமும் அதுவே என்றும், எம்,ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சடலங்களை அடக்கம் செய்வதற்கு 6 இடங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது, இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் குற்றம்சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *