மியான்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங்சாங் சூகி மீது மியான்மார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை வரும் 15ஆம் திகதி வரை தடுத்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மியான்மார் காவல்துறையினரின் அறிக்கை கூறுகிறது.
தலைநகர் நேபிடோவில் (Naypyidaw) உள்ள ஆங் சான் சூகியின் இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட ஆறு தொலைத்தொடர்பு கருவிகள் கைப்பற்றப்பட்டதாக மியான்மார் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் அவரைத் தடுத்து வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றிடம் காவல்துறையினரால் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி வின் மின்ட் (Win Myint) மீதும் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.