முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம்,-முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும்!

455

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களிடம் கவுரவம் பார்க்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் பற்றியோ, அறவழியில் போராடுவோரின் கோரிக்கைகள் பற்றியோ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதி காப்பதும், அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து போராட்ட உணர்வை மேலும் தூண்டிவிடுவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையான முன்னறிவிப்புகள் கொடுத்து பல மாதங்களாக போராடி வந்தாலும், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல்- அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயம் பற்றியும் அக்கறை செலுத்தி தீர்வு காண முயற்சிக்காமல் முதல்வர் வெறும் அடக்குமுறை நடவடிக்கைகளை மட்டும் கட்டவிழ்த்து விட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம் என்று நினைப்பது கொடூரமான மனிதநேயமற்ற மனப்பான்மையாகும்.

பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வு தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது. போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி- மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இப்போது முக்கியமே தவிர அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் கவுரவம் அல்ல என்பதை மனதில் நிறுத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

ஆகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்தவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தினை சுமுகமான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியும் காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் முறையான பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்படுவற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தற்போது ஊழல் அதிமுக அரசு எடுத்து வரும் சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் நிச்சயம் ரத்து செய்யப்படும்” என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *