முக்கிய செய்திகள்

ஆணையாளருக்கு இடைக்கால தடையுத்தரவு

35

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அந்த அடிப்படையில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்றபோது 10 அதிகாரங்கள் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி இன்னொரு சபை தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.

அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும் கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமாட்டேன் என்றும், அந்த அதிகாரங்களை தானே பயன்படுத்துவேன் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும், அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இடைக்காலத் தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த தவணை இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சேபனை தொடர்பான விவாதத்தினையும் இடைக்கால தடையுத்தரவு விவாதத்தினையும் செவிமடுத்த நீதிமன்றம் ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *