ஆண் தமிழ்க் கைதிகளை சிறிலங்கா இராணுவத்தின் பெண் படை அதிகாரிகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பிலான அதிர்ச்சி அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது

1215

விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை, சிறிலங்கா பெண் படை அதிகாரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக, ஜெனீவாவில் நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் பயங்கரமான தகவல்களை அடங்கிய இந்த அறிக்கை, மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

“மௌனம் கலைந்தது” – “தப்பிவந்த ஆண்கள் இலங்கையில் போரை மையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” என்ற அறிக்கை இலங்கையிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று, யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் பகிரங்கப்படுத்திய, இந்த அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது எனவும், ஏற்கனவே பொஸ்னியா குறித்து ஆய்வு செய்திருப்பதாகவும், ஆனால் இலங்கையில் தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு, பல தடவைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கேள்விப்படும் போது மிகவும் மோசமான கொடூரத்தை உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாறான சம்பவங்களை தான் இதற்கு முன்னர் கண்டிருக்கவோ, கேள்வி பட்டிருக்கவோ இல்லை எனவும், மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான கொடூரங்களாக இவை இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் வைத்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு 14 வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றார் என்பதுடன், இந்த அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்த பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தியதாகவும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப் பெண் என்றும், கொடூரத்திற்கு முகம்கொடுத்த ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உட்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண் படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.

பெண் காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு தம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றதாகவும், இருவர் காவல்துறை சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர் என்றும், அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கொடூரமான சித்திரவதைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகள் சிறிலங்கா இராணுவம், காவல்துறை, புலனாய்வுப்பிரிவுகள் உட்பட சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்ற போதிலும், இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எடுத்தமாத்திரத்தில் நிராகரிப்பதன் ஊடாக, விசாரணைகளை மூடி மறைப்பதையே வாடிக்கையாக இலங்கை அரசு கடைபிடித்து வருவதாக புதிய அறிக்கையை தயாரித்த கலாநிதி ஹெலீன் டூகே தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *