ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்

432

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரிலுள்ள பிரபல விளையாட்டு உடற்பயிற்சி நிலையத்திற்கு உள்ளேயும், ஒரு மணிநேரம் கழித்து கட்டிடத்திற்கு வெளியேயும் இரண்டு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளன.

குறித்த இரண்டு தாக்குதல்களிலும் முதலில் 16 என்று குறிப்பிடப்பட்ட உயிரிழப்புக்கள் இன்று 26ஆக அதிகரித்துள்ளதுடன், சம்பவத்தில் 91இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நகரில் நேற்று மாலை விளையாட்டு உடற்பயிற்சிக் கூடத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், வாயிற்காப்பாளரை துப்பாக்கியினால் சுட்டு வீழ்த்தி கட்டிடத்திற்குள் ஆட்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் முதல் குண்டினை வெடிக்க வைத்ததாக, குறித்த சம்பவத்தினை கண்கூடாக நேரில் கண்ட சாட்சியாளரான முஹம்மட் ஷரீஃப் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு மணிநேரத்தின் பின்னர் குறித்த கட்டிடத்திற்கு வெளியே கூடியிருந்த மக்களுக்கு இடையில் நின்று இன்னுமொரு குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகவும், அதில் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

91இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

இந்த இரட்டைத் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்றுள்ள போதிலும், குறித்த தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று தலிபான் பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *