முக்கிய செய்திகள்

ஆளில்லா விமானங்கள் மூலம் விமானங்களைத் தாக்கும் உத்தியை பயங்கரவாதிகள் பின்பற்றக்கூடும்

1242

விளையாட்டு ஆளில்லா விமானங்கள் உட்பட வர்த்தக ஆளில்லா விமானங்களின் பாவனைகளும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், இவ்வாறாள ஆளில்லா விமானங்களைக் கொண்டு ஏனைய பாரிய விமானங்களை தாக்கும் உத்தியினை பயங்கரவாதிகள் பின்பற்றக்கூடும் என்று கனேடிய மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் கனேடிய பயணிகள் விமானம் ஒன்றுக்கு அருகாக பறந்து சென்ற ஆளில்லா விமானம் தொடர்பிலான செய்தி பரவலாக வெளியான நிலையில், அதனை பயங்கரவாதிகள் முன்னுதாரணமாக கொண்டு செயற்படக்கூடும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல சிறிய ஆளில்லா விமானங்கள், இலகுவாகவே வானூர்தி இலக்குகளை தாக்குவதற்கு பயன்படுத்த முடியும் என்பதனை கனேடிய போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எட்மண்டனில் இருந்து புறப்பட்டுச் சென்ற வெஸ்ட் ஜெட் விமானத்திற்கு அடியில் சுமார் 60 மீட்டர் தூரத்தில் ஒரு ஆளில்லா விமானம் பறந்து சென்றதுடன், கடந்த மாதமும் ரொரன்ரோவுக்கு பயணித்துக்கொண்டிருந்த போர்ட்டர் எயர்லைன்ஸ் விமானத்துக்கு மிக அருகாக ஆளில்லா விமானம் என்று கருதப்படும் ஒன்று சென்றுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த அந்த விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பித்ததாக ஊடகங்கள் மூலம் பரபரப்பாக வெளியிடப்பட்ட செய்திகள், பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இதனை தாக்குதல் முயற்சியாக மேற்கொள்ளக்கூடிய உந்துதலை ஏற்படுத்தக்கூடும் என்று புலனாய்வுத் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இருந்த போதிலும் பத்தில் இரு்நது நாற்பது நிமிடங்கள் வரையில் மட்டுமே பறக்கக்கூடிய இவ்வாறான ஆளில்லா விமானங்களால், வேகமான காற்றின் மத்தியில், அதி உயரத்தில் விமானங்களை இலக்குவைக்க முடியாது எனவும் சில நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *