முக்கிய செய்திகள்

ஆளுநர் மக்களை மிரட்டுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் வெளியிட்டுள்ளார்

559

தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என்று இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர் மக்களை மிரட்டுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திராவிட முன்னேற்றக் கழத்தினர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பில் ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ஆளுநர் பணியில் குறுக்கிட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆளுநரின் இந்த அறிவிப்புத் தொடர்பில் பல்வேறு கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களுக்கே ஆளுநர் விடும் மிரட்டல் மற்றும் எச்சரிக்கையே இது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

உண்மையில் தமிழக ஆளுநரே வரம்பு மீறி மாவட்ட ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் தமிழக அமைச்சரவையின் பணியையே கபளீகரம் செய்கிறார் என்றும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று தமிழக ஆளுநர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில்தான் மாநில ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், அத்தகைய அதிகாரம் இந்தியாவில் இல்லை என்பதை ஆளுநர் புரோஹித் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தன் பொதுச் செயலாளர் வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *