முக்கிய செய்திகள்

ஆவணத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்தது…

219

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும்,  போரவையின் உறுப்பு நாடுகளிடம், முன்வைப்பதற்கான ஆவணமொன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்துள்ளது.

இந்த ஆவணத்தில், கூட்டணியின், பங்காளிக்கட்சிகளான, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தக் கோரிக்கை ஆவணம், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணம், விரைவில் ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

இந்த ஆவணத்தில், தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில், புரியப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமோ அல்லது, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திடமோ பாரப்படுத்தல் வேண்டும்.

இனப்படுகொலைக்கான தீர்ப்பினை வழங்குவதற்காக  சிறப்பு காப்பீட்டையும் விசாரணை வரையறையையும் கொண்ட “சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறை’ ஒன்றை உருவாக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச ரீதியில் ஒழுங்கு படுத்தப்பட்ட மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடிய குற்றங்களுக்காக,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயன்முறைக்கு மேலதிகமாக,  சர்வதேச நீதிமன்றில் சிறிலங்காவுக்கு எதிராக வழக்கு தொடர்வதில் ஐ.நா.உறுப்புரிமை நாடுகள் பங்குபற்ற வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *