முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும் பகல்-இரவு டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடக்கம்

1303

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடை யிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மின்னொளியின் கீழ் நடக்க இருப்பதால் அதற்குரிய பிரத்யேகமான மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த டெஸ்டுக்கு பயன்படுத்தப்படும். ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் நடப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வெற்றி கண்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு அந்த அனுபவம் கைகொடுக்கும். மேலும் இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாகும். 1989-ம் ஆண்டுக்கு பிறகு (20 வெற்றி, 7 டிரா) அந்த அணி இங்கு தோற்றதில்லை. அதனால் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் 29 வயதான உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பிடித்து முன்னணி வீரராக திகழ்கிறார். டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக தனது ‘பிறந்த’ தேசத்தை எதிர்கொள்ள இருப்பதால் அவர் எந்த மாதிரி உணர்ச்சியை வெளிக்காட்டுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

“எனது பெற்றோர் இப்போது உண்மையான ஆஸ்திரேலியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அதே நேரத்தில் அவர்கள் பாகிஸ்தானில் நீண்ட காலம் வசித்து இருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் பாகிஸ்தானியர் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் இந்த டெஸ்ட் அவர்களுக்கு மிக முக்கிய தருணமாக இருக்கலாம்” என்று கவாஜா குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போதும் டெஸ்ட் தொடரை (இது 12-வது பயணம்) வென்றது இல்லை. அதிலும் கடைசியாக அங்கு விளையாடிய 9 டெஸ்டுகளிலும் தொடர்ந்து மண்ணை கவ்வியிருக்கிறது. அந்த சோகத்துக்கு விடைகொடுக்க முயற்சிப்பார்கள். யூனிஸ்கான், மிஸ்பா உல்-ஹக், அசார் அலி, ஆசாத் ஷபிக், சர்ப்ராஸ் அகமதுவைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் பேட்டிங்கில் சாதித்தால் ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கலாம். ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சு எடுபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கலாமா? என்று ஆஸ்திரேலியா யோசித்து வருகிறது.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் முன்பு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இது பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும். அவர் கூறுகையில் ‘இங்குள்ள சூழலுக்கு தகுந்தபடி சீக்கிரம் மாற்றிக்கொள்வதே முக்கிய அம்சமாகும். அதற்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொண்டு விட்டால் நன்றாக செயல்பட முடியும். 270, 280, 300 ரன்கள் வரை எடுத்தாலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பேட்ஸ்மேன்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஏனெனில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை எங்களது பவுலர்களிடம் இருக்கிறது’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: மேட் ரென்ஷா, டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்கோம்ப், நிக் மேடிசன், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், ஜாக்சன் பேர்டு.

பாகிஸ்தான்: சமி அஸ்லாம், அசார் அலி, பாபர் அசாம், யூனிஸ்கான், மிஸ்பா உல்-ஹக் (கேப்டன்), ஆசாத் ஷபிக், சர்ப்ராஸ் அகமது, வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, முகமது அமிர், ரஹத் அலி.

இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *