முக்கிய செய்திகள்

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆதர் சட்டம் செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

416

இந்தியாவில் ஆதார் அடையாள எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பில் ஆதார் சட்டம் செல்லும் என்றும், இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் கைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதார் விளிம்பு நிலை மக்களுக்கு கண்ணியத்தை வழங்குகிறது என்றும், தனியுரிமையைக்காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம் பெரிது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் 0.232 சதவீதமே தோல்வி அடைந்துள்ளது என்றும், இந்த நிலையில் தற்போது ஆதார் செல்லாது என்று சொல்வது ஆதாரை பெற்ற 99 சதவீத மக்களை தொந்தரவு செய்வது போன்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு 38 நாட்கள் விசாரணை செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதை நோக்காக கொண்டு அங்கு ஆதார் அடையாள எண் முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *