முக்கிய செய்திகள்

இந்தியாவும் – பாகிஸ்தானும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.

282

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தி வெளியிட்ட சீனா, சர்வதேச நாடுகளின் முழு ஒத்துழைப்புடன் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவும் – பாகிஸ்தானும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.

 

இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய தாக்குதல் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங்கிடம் பத்திரிகையாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லூ காங்

‘‘இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் தெற்காசியாவின் முக்கியமான நாடுகள். தெற்காசியா பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்த இருநாடுகள் இடையே நல்லுறவு அவசியம்’’

‘‘இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் இந்த சூழ்நிலையில் பொறுமையுடன் செயல்பட்டு தங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவார்கள் என நம்புகிறோம்’’ என்று லூ காங் கூறினார்.

இந்த தாக்குதல் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் லூ காங்கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லூ காங் ‘‘பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது உலக வழக்கம். அதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்புடன் இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை செயல்படுத்துவது அவசியமாகும்’’ என தெரிவித்தார்.

மேலும் புல்வாமா தாக்குதல் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசி மூலம் பேசினார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக நம் இருநாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் வாங் யீ தெரிவித்ததாக லூ காங் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

இந்தியா – பாகிஸ்தான் பொறுமை காக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர் மஜா கோசிஜான்சிக் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ‘‘இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிடமும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தற்போதுள்ள பதற்றமான சூழல் மேலும் மோசமடையாமல் தடுக்க இருதரப்பினரும் உச்சக்கட்ட பொறுமை காக்க வேண்டியது அவசியம்’’ என்று மஜா கோசிஜான்சிக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அறிவுரை

இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன் வெளியிட்ட அறிக்கையில்

‘‘இருநாடுகளும் பொறுமையுடன் இருக்கும்படி ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. பாகிஸ்தான் தன் மண்ணில் செயல்படும் ஜெய்ஷ் –இ – முகமது, லஷ்கர் –இ – தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மாரிஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *