முக்கிய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்

351

ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இருதரப்பினரும் பொறுமை காப்பது அவசியம் என்று ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஐநா பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில்

‘‘இந்தியா பாகிஸ்தான் இருதரப்பினரும் அதிகபட்ச பொறுமையை கடைபிடித்து இருநாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான உதவிகளுக்கு இருதரப்பினரும் ஐநாவை நாடலாம் என்று ஆண்டோனியோ கட்டாரெஸ் தெரிவித்துள்ளார்’’ என ஸ்டீபன் துஜாரிக் கூறினார்.

ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி இருவரும் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என்று கேட்டுள்ளது குறித்து ஸ்டீபன் துஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக் ‘‘பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதை கண்டு நாங்கள் கவலை படுகிறோம். இந்த விவகாரம் குறித்து ஐநா பொதுசெயலாளரிடம் பேசவேண்டும் என்று ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்’’

‘‘அதற்கான கடிதம் ஐநாவிடம் அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் உண்மையில் அதுபோன்ற எந்த கடிதமும் இதுவரை வரவில்லை’’ என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு கடந்த வாரம் ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை ஆணையம் கண்டனம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா மனித உரிமை ஆணையம் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்வில்லி ‘‘ இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது பிப்ரவரி 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு மனித உரிமை ஆணையர் மிச்செல் பாச்சலெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.’’

‘‘அதை தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களால் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு ஆபத்து ஏற்படாது என மிச்செல் பாச்சலெட் நம்புகிறார்’’

‘‘இந்த தாக்குதலை காரணமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் காஷ்மீர் மக்கள் தாக்கப்படுவதாக கிடைக்கும் தகவல் கவலை அளிக்கிறது.இதை தடுக்க இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’’ என்று ரூபர்ட் கால்வில்லி கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *