இந்திய தூதுவர் கோபால் பாக்லே இன்று அவசரமாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றம் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- ஜப்பான், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்குள் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை நிறைவேற்றும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது என்ற இந்திய தரப்பின் நிலைப்பாட்டை, அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினால் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.