இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

1102

இனப்பிரச்சினைக்கான தீர்வை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அதனை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது, இலங்கை வரலாற்றில் தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு இழுத்தடிப்புக்கள் இடம்பெற்றதோ, அதன் தொடராகவே தற்போதைய நகர்வுகளும் இருக்கின்றன என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

அதிகாரப் பரவாக்கல் அதோ வருகிறது இதோ வருகிறது என்று கூறப்படுவதெல்லாம் சிறுபான்மை இனங்களுக்குக் கூறப்படும் ஒரு பூச்சாண்டியைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், இந்தப் பின்னணியை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு என்று பொறிக்கப்பட்ட வெறும் போர்வையை மாத்திரம் மாகாணங்களுக்கு மத்திய அரசு போர்த்தியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது அரசியல் திருத்தத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் மத்திய அரசால் மறுக்கப்பட்டு,  நாட்டிலே ஒரு அரசியல் யாப்பே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது என்றும், காணி, காவல்த்துறை, கல்வி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மறுக்கப்பட்டிருப்பதுடன், எழுத்துக்களில் மாத்திரம் அதிகாரப் பரவலாக்கம் நடமாடுகிறது என்றும் அவர் விபரித்துள்ளார்.

13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசிற்கு ஒரு நாள்கூட கால அவகாசம் தேவையில்லை என்பதுடன், அதற்கொரு அமைதிப் பேச்சுவார்த்தையும் தேவையில்லை என்றும்கூறிய கிழக்கு மாகாண முதலமைச்சர், இவ்வாறிருக்கையில் இந்த விடயங்கள் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது என்றும்  தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *