முக்கிய செய்திகள்

இனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்…

431

இனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… !
சுதந்திர தினம் யாருக்கு?
………………………………………………………………………………………….
-இதயச்சந்திரன்

‘சுதந்திர தினம்’ எனும் போது, சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் நினைவு வரும்.
இலங்கையில் அப்படியாக யாரும் பெரியளவில் நினைவுகூரப்படுவதில்லை.

காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களே, பின்னர் பிரதமராகவும் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த தியாகியாகவும் போற்றப்படுகின்றனர்.

அந்த தியாகச் செம்மலே, கல்லோயாத் திட்டம் மூலம் கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்தார் என்பதை இந்த சுதந்திர தினங்கள் நினைவுபடுத்துகின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வுச் சூழலைப் பொறுத்தவரை, இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டதாக வரலாறு இல்லை.

திருமலை நடராசன், சார்ள்ஸ் அன்டனி போன்ற மண்ணின் மறவர்கள், இலங்கைத் தேசியக் கொடியை அடியோடு நிராகரித்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

இருப்பினும் ஈழத்தமிழர்களை பொறுத்தமட்டில், தாய் மண்ணின் மீட்பிற்காய் களமாடி வீரமரணமடைந்த பல்லாயிரக்கான மாவீரர்களின் தியாகம் நிலையானது.

அவர்கள் எமதினத்தின் சுதந்திரத்திற்காக விதையாகிப் போனவர்கள்.

அப்படி இருக்கையில், எவ்வாறு அடக்கும் பேரினவாத அதிகாரவர்க்கத்தின் சுதந்திர தினத்தை, ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் கொண்டாட முடியும்?.

நல்லிணக்க அரசியல் பேசும் சரணாகதி அரசியல்வாதிகளுக்கு, சிங்களத்தின் சுதந்திர தின நிகழ்வுகள் தேவைப்படலாம்.

மக்களின் வாக்குகளைப் பெற்று, சலுகைக்காக அரசியல் செய்யும் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.

முன்பு சோனியாவின் கண்களில் கருணை ஒளியினைக் கண்டது போல, ரணிலின் ஒற்றையாட்சி அரசியல் சாசன வரைபில் சமஸ்டியைக் கண்ட கொடுமையான விடயங்களும் இப்போது சொல்லப்படுகிறது.

2009 ஆண்டிற்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியலானது, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை வாக்குவங்கி போட்டியரசியலிற்குள் மூழ்கிவிட்டது.

‘ஏக்கிய ராஜ்ய’ விவாதங்களுக்கு இடைக்கால ஓய்வு கிடைத்த நிலையில், அபிவிருத்தி அரசியலில் களமிறங்கியுள்ளது கூட்டமைப்பு.

அதுவும் அடுத்த தேர்தல் வரையே இது நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரணிலின் அதிகாரத்தின் கீழ்வரும் இந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி சபாக்களுக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் நடந்துள்ளது.

‘சோறா..சுதந்திரமா?’, ‘ அபிவிருத்தியா… தீர்வா?’ என்று வீர முழக்கமிட்டவர்கள், உள்ளூராட்சிசபை வீழ்ச்சியோடு அபிவிருத்திக்கு தாவி விட்டனர். அதன் ஆயுளும் குறுகிய காலந்தான்.

இருப்பினும் இந்தத் தாவலுக்கும் ஒரு விலை உண்டு.
சிங்களத்தின் சுதந்திர கொண்டாட்டத்தில் சிங்கக்கொடியை உயர்த்தும் சோகமும் நிகழலாம்.

அத்தோடு ஐநா மனித உரிமைப் பேரவையில் காலநீடிப்பிற்கு கையசைக்கும் கொடுமையாகவும் இருக்கலாம்.

ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றியதற்கும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டத்தைப் பொறுப்பேற்றதற்கும் தொடர்பு உண்டு.

அதுதான் அங்கு நடந்த பேரம்பேசும் நிகழ்வு.

கூட்டமைப்பின் அரசியல் இருப்பிற்கு அவசியமான தேவையாகவும் இது இருக்கிறது.

கூட்டமைப்பிற்கு எதிராக உருப்பெறும் பலமான எதிர்ப்பரசியல் குறித்த கவலை, அதன் செயற்பாட்டார்கள் மத்தியில் ஏற்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.

இப்போது தொடரும் நல்லிணக்க- சரணாகதி அரசியல் போக்கு நீடிக்குமாயின், மாற்று அரசியலின் தேவை தவிர்க்கமுடியாதது போலாகிவிடும்.

அவ்வாறான மாற்று அரசியல் தளமானது பிராந்திய வல்லான்களின் நலனுக்கு சாதகமாக அமையாத அதேவேளை அவர்களுக்கு சிக்கலையும் கொடுக்கும்.

சிங்களத்தின் ‘சமஷ்டி’ கொடாக்கண்டன் நிலையையும் , ‘ஒற்றையாட்சி’ விடாக்கண்டன் நிலையையும் கவனத்தில் கொள்ளும் இலங்கையில் தலையிடும் வல்லரசுகள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசையோடு இணங்கிப் போவது கடினமாக இருக்கும்.

இந்நிலையில், எமக்குச் சாதகமான சர்வதேச சூழல் உருவாகிறதென்கிற எதிர்வுகூறல் எவ்வளவு அபத்தமானது என்பதனை, மைத்திரியார் சனாதிபதியாகிய ஆட்சிமாற்ற காலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆகவே அடிப்படைக்கோட்பாட்டில் பற்றுறுதி கொண்ட, பலமான மாற்று அரசியல் தளத்தின் அவசியம், மக்களின் பொதுப்புத்தியில் உணரப்பட வேண்டும்.
வெறுமனே தேர்தல் அரசியல் பாதை மட்டும் அதனை உருவாக்குமென எதிர்பார்க்க முடியாது. மக்கள் திரள் அரசியல் இயக்கத்தின் இருப்பும் இங்கு அவசியமாகிறது.

ஒடுக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில், அடக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் கவனத்தில் கொள்ள வேண்டிய விவகாரம் இதுவாக இருக்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *