முக்கிய செய்திகள்

இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்

1696

தமிழர்களை இனவழிப்பு செய்த சிறிலங்கா இராணுவத்தையும், அதற்கு கட்டளைகளை வழங்கி வழிநடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதை, நல்லாட்சி அரசின் கடந்த மூன்று ஆண்டுகால சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று, தன்னை சந்தித்த அனைத்துலக பத்திரிகையாளரிடம் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜொஹான் மைக்கெல்சனிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவிததுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை எனவும், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பன இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரினால் ஏற்பட்ட பக்கவிழைவுகளே எனவும் அவர் விபரித்துள்ளார்.

எனவே புனர்வாழ்வு, அபிவிருத்தியை காரணம்காட்டி நிரந்தரத் தீர்வை காலங்கடத்துவதனை ஏற்கமுடியாது எனவும், இனவழிப்பு போர் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதனை இப்போதும் நீடிக்கும் விதத்திலேயே இன்றைய அரசின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

மின்சாரக் கதிரை பற்றிய அச்சம், அனைத்துலக போர்க் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் அனைத்துலக நீதிபதிகளை நாட்டிற்குள் வரவழைத்தல் போன்ற விடயங்கள் நல்லாட்சிக் காலத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை நாட்டின் குடிமக்களான தமிழர்களை கொன்றொழித்ததுடன், அதற்கான பொறுப்புக் கூறலையும் நிராகரித்து வருவதன் மூலம், ஒன்றுபட்ட நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்ற அறைகூவல் வெறும் வார்த்தையே என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள் என்பதையும் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் போக்கிலேயே இன்றைய நல்லாட்சி அரசும் பயணித்து வருவதனை மைத்திரிபால சிறிசேனவின் இவ்வாறான அறிவிப்பு துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறு வெளிப்படையாக கூறிவரும் நிலையில், அழித்தொழிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமக்கான நீதியை எவ்வாறு இவர்களிடம் எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணை அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகளும் இன அழிப்பு போரிற்கு நேரடி, மறைமுக உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கடப்பாடு உடையவர்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனங்களை கண்டுகொள்ளாது இருப்பதானது, மென்மேலும் அதே பாதையில் இலங்கை அரசாங்கம் பயணிப்பதற்கான ஏதுநிலையையே ஏற்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே அனைத்துலக நாடுகளும் ஐ.நா. மன்றமும் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறலின் வழியே தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தீர்வுகாண அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *