முக்கிய செய்திகள்

இனவழிப்பு வார்த்தையால் குழம்பிய சிறிலங்கா நாடாளுமன்றம்

124

‘இனவழிப்பு’ என்ற வார்த்தையை பிரயோகிகத்தமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரையான பேரணியின் போது மக்கள் வலியுறுத்திய நான்கு முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமது உரையின் போது இந்த பேரணியில் முன்வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளை சபையில் தெரிவித்த போதும், இனவழிப்புக்கு நீதி கோரியமை, இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு பாரப்படுத்தல் போன்ற கோரிக்கைகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, ‘இனவழிப்பு’ என்ற வர்த்தைப் பிரயோகிக்கப்படுவதற்கான காரணத்தை வினவினார்.

தமிழ் மக்கள் பூர்வீகமாக உரிமைகொண்டுள்ள காணிகள் அபகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் திட்டமிட்டு இடம்பெறுகின்ற நிலைமை இனவழிப்பாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனினும் பாரிய அளவான மக்கள் கொல்லப்படுகின்றமையையே இனவழிப்பு என சுட்டிக்காட்டிய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரினார்.

இதற்கு பதில்வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதுதொடர்பான பகிரங்க விவாதம் ஒன்றை ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

அல்லது, ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு சென்று இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதா? இல்லையா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவரின் உரையை நாடாளுமன்ற பதிவேடான ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வார்த்தைப் பிரயோகத்தை நீக்குமாறு கோரும் உரிமை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இல்லை என்றும், ஆனால் தாம் பிரயோகிக்கின்ற வார்த்தையின் தன்மை குறித்து அந்தந்த உறுப்பினர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *