முக்கிய செய்திகள்

இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அழைப்பு விடுத்து்ளளது

854

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அழைப்பு விடுத்து்ளளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது என்பதையும், எங்கள் தேசத்தாய் துடிக்கத் துடிக்க நஞ்சூட்டப்படுகிறாள் என்பதையும், எங்கள் தமிழ்த்தாய் வெட்கித் தலைகுனிந்து அவமானத்தில அழுது புரள்கிறாள் என்பதையும், எங்கள் தமிழீழத்தாய் இரத்தக்காட்டேறிகளின் கோரப்பற்களால் குதறப்பட்டுக் குருதி மழையில் நனைந்துகிடக்கிறாள் என்பதையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்தத்தாயின் – தமிழீழத் தாயின் பிள்ளைகளாகிய நாம், எங்கள் மொழியும் , கலாச்சரமும், பண்பாடும் வேரோடு அழிக்கப்படுவதைக் கண்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் எனவும், எமது வாழ்வியலின் தொன்மையான புனிதமான இன வரலாறு எம் கண்முன்னே சீரழிக்கப்படுவதை இன்னமும் கண்டும் காணாமலிருக்கிறோம் எனவும், சொந்த இனமே அழிவுப்பாதையில் வழிநடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடைப்பிணங்களாய்க் கிடக்கிறோம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று ஒரு தங்கைக்காக, இன்று ஒரு சிறுமிக்காக, நாளை இன்னுமோர் உறவுக்காக எனப் பெயரளவில் கூடிநின்று ஆர்ப்பரித்துவிட்டு ஓய்ந்துவிடப்போகிறோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று எமது தாய்மண், போதைப்பொருள் பாவனையும், பாலியல் குற்றங்களும், கொலை கொள்ளைகள், குழுமோதல்கள், சாதியின் பெயரால் கலவரங்கள் என்பன அதிகரித்த ஒரு வஞ்சிக்கப்பட்ட பூமியாகிவிட்டது எனவும் கவலை வெளியிட்டுள்ளது.

இவற்றையெல்லாம் திட்டமிட்டபடி தட்டிக் கொடுத்தும், ஊக்கப்படுத்தியும், தலைகோதிவிட்டபடியும் பேரினவாத அரசின் இராணுவ இயந்திரம் ஊக்கமளித்துக்கொண்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், ஒரே அரசின் ஆளுகைக்குட்பட்ட இலங்கை தேசத்தில், பெரும்பான்மை இனத்தினருடைய வாழ்விடங்களில் தேவைப்படாத இராணுவ நிர்வாக கட்டமைப்புக்கள் ஏன் சிறுபான்மை இனத்தினருடைய நிலப்பரப்புக்களில் மட்டும் நிலை நிறுத்தப்படவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுவே ஒரு திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பதைப் பட்டவர்த்தனமாகச் சுட்டிநிற்கின்றது எனவும் தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், இதனை எத்தனை காலம் அனுமதிக்கப்போகிறோம் என்றும், இன்னும் எத்தனை காலம் பாராமுகமாய்க் கடந்து போகப்போகிறோம் எனவும், எங்கள் விழுமியங்கள் யாரால் பாதுகாக்கப்பட வேண்டும் – இதன் காவலர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் முடிவைக்காணும் மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது எனவும், இனியும் காலம்தாழ்த்துகின்ற ஒவ்வோரு நொடியும் எங்கள் கண்முன்னாலேயே அழிவுகளைச் சந்திக்கின்ற துர்ப்பாக்கியம் மிக விரைவில் வந்துசேரப்போகின்றது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய அழிவை நோக்கி வழிநடத்தப்படும் ஒரு இனத்தை, அந்த மண்ணினுடைய மக்களின் விழிப்போடும், எழுச்சியோடும்தான் வெற்றிகொள்ள முடியுமென்பதே சத்தியமாகும் எனவும், அந்தச் சத்திய எழுச்சியின்முன்னே அத்தனை தீமைகளும் எரிந்து சாம்பலாகிவிடும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த மக்களின் ஒற்றுமையான திரட்சியில்தான் இந்த எழுச்சி நிச்சயம் சாத்தியமானது என்பதையும், ஆளுக்கொரு கொள்கை, நாளுக்கொரு அமைப்பு எனப் பிரிந்து நிற்காமல், ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய எழுச்சியைக் கட்டிவளர்க்க எல்லோரும் மனந்திறந்து பாடுபடவேண்டிய காலமிது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிமேலும் நாம் காலம் தாழ்த்தாமல் மாணவர்களாக, இளைஞர்களாக, அறிஞர்களாக, வழிகாட்டிகளாக, உணர்வாளர்களாக ஒட்டுமொத்தமாக எழுச்சிகொண்டு, சொந்த மண்ணின் மக்களாக ஒன்றுபட உறுதிகொள்வோம் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எங்கள் மண்ணை அழித்துக்கொண்டிருக்கும் அத்தனை தீய சக்திகளையும் எங்கள் அறிவாயுதம் கொண்டு வெல்வோம் எனவும், எங்கள் தேசத்தின் துயர்களை எங்கள் தோள்களில் ஏற்றிவைத்து, தூரவிலகாமல் சேர்ந்து நடப்போம் என்றும், மீண்டும் சாதனைத் தமிழராய் நாம் அனைவரும் நிமிர்ந்து நிற்போம் என்றும், “எங்கள் மண்ணை நாங்கள் காப்போம்” எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *