இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க காவல்த்துறை மா அதிபருக்கு உத்தரவு

966

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க காவல்த்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று இரவு இடம்பெற்ற பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்து்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்குமாறான உத்தரவை காவல்த்துறை மா அதிபருக்கு பிறப்பித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சருக்கு சனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுளளார்.

இதன்போது புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

நீதியமைச்சரின் குறித்த விளக்கத்தை அடுத்து, புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த காவல்த்து மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு சனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், சனாதிபதி தன் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் சுமனரத்தின தேரர் மற்றும் தற்போது கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், சிங்கள தீவிர நிலைப்பாட்டாளர் டேன் பிரியாத் என்ற சுரேஷ் பிரியசாத் ஆகியோர் தொடர்பில் அமைச்சர்களின் விரிவான கருத்துகளை சனாதிபதி கேட்டறிந்து கொண்டதாகவும், அதன் பின்னரே நாட்டின் தேசிய சகவாழ்வை அழிக்கும் அனைத்து இன, மத தீவிர நிலைபாட்டாளர்களையும் கைது செய்யும் நிலைப்பாட்டை சனாதிபதி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை இடம்பெற்ற இந்த பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதூதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர், சனாதிபதியின் செயலாளர், காவல்த்துறை மா அதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *