இனவாத சக்திகளினால் தமிழ் இனத்தின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன!

907

மனிதத்தை ஏற்க மறுக்கும் இனவாத சக்திகளினால் தமிழ் இனத்தின் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட போது தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டது என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள் அவர், தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, மொழிப்பயன்பாட்டில் இரண்டாம் தரப்பிரசைகளாக்கல், கல்வியில் ஓரங்கட்டுதல், அரச நியமனங்களில் பாகுபாடு எனத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பக்கச் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த இளைஞர் அணிகளினால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையே ஆயுத கலாச்சாரமாக விரிவடைந்து என்றும் விபரித்துள்ளார்.

இவையே நாட்டில் பாரிய இனக் கலவரங்களுக்கும், அநியாய உயிரிழப்புக்களுக்கும், சொத்து அழிப்புக்களுக்கும் காரணிகளாக அமைந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்குரிய போராட்டங்களில் சிங்கள தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக ஈடுபட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள் என்று தெரிய வந்த மிகச் சொற்ப காலத்துக்குள்ளேயே, தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான வேற்றுமை உணர்வுகள் வளரத் தொடங்கி விட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்களை ஒடுக்குவதற்கும், தமிழ் மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள், வியாபார நிலையங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை காலத்துக்குக் காலம் அழித்தொழிக்கவும், தமிழ் மக்களை தொடர்ந்தும் நலிவடைந்த ஒரு இனமாக மாற்றவும் சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்கள் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்றும் அவர் விபரித்துள்ளார்.

சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்களின் இந்த நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட நீண்ட கால போரின் பெறுபேறாக இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை தற்போது அனைத்துலக நாடுகளால் கையாளப்படுகின்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விவகாரங்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஐ.நா சபையில் தற்போது அவதானிக்கப்பட்டு வருகின்றன போதிலும், எங்கள் பிரச்சினைகள் வல்லரசு நாடுகளின் சொந்த அரசியலுக்கும் ஒரு காரணியாக அமைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் பிரச்சனைகளைக் காரணங்காட்டியே வல்லரசு நாடுகளின் பனிப்போர்கள் நடைபெறுகின்றன என்பதுடன், தங்களிடையே இருக்கும் சகல அரசியல் முரண்பாடுகளுக்கும் மனித உரிமைகளையே நாடுகள் பல பாவித்து வருகின்றன என்றும் அவா விபரித்துள்ளார்.

அதே போல் தமிழர்கள் தங்களின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக் காட்டினால், அவற்றின் மூலம் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், தம்மை ஆத்திரமூட்டுவதாக அமைவதாகவும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் சிலர் கூறுகின்றார்கள என்றும் முதலமைச்சர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஓரளவுக்காவது தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழ் மக்கள் நம்புவதாகவும், இவர்களால் உருவாக்கப்படுகின்ற அரசியல் திருத்த சட்டமூலங்களில் எமது பிரச்சனைகள் நீதியான முறையில் ஆராயப்படும் என அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் இந்த அரசின் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனுசரணைகளையும் நல்கிவருகின்றார் என எண்ணுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் அறுபத்தேழாயிரம் ஏக்கர் காணிகளில் சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதையும், மீன்பிடி கேந்திர மையங்கள் படையினர் வசமே உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், வடக்கில் புதிய புதிய பௌத்த மதக் கோவில்களின் சட்டரீதியற்ற உருவாக்கத்திற்கு எதிராக தாம் கோரிக்கைகளை முன்வைக்கும்போது, தம்மை அடிப்படைவாதிகளாக வர்ணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஐயங்களைத் தோற்றுவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பிலான பட்டியல் ஒன்றையும் முன்வைத்துள்ள முதலமைச்சர், அதில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும், பௌத்த இன மக்கள் எவருமே வாழாத பகுதிகளிலும், இராணுவ முகாம்கள் அற்ற பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் புதிய பௌத்த கோவில்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும், போர்க்குற்ற விசாரணை அனைத்துலக உள்ளீடல்களுடன் ஆரம்பிக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

அத்துடன் எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நீண்ட காலம் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுளள அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடடியாக நீக்கினால் இந்த இளைஞர்களை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டிவரும் என்பதையும் சுடடிக்காடடியுள்ளார்.

அது மட்டுமின்றி இறுதி போரின் போது சரணடைந்த போராளிகள் மற்றும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வீடுகளை இழந்த மக்களுக்கான புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும், மீன்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களை உடனடியாக விடுவித்து மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க வேண்டும, எமது வளங்களைத் தெற்கில் இருந்து வந்து கவர்ந்து செல்வதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *